இலங்கையிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'தேசம்" எனும் பத்திரிகையில் ஜனவரி 2018 இல் வெளிவந்த நேர்காணல். தேசம் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள். கோவிட-19 காலத்து பயணத்தடையின்போது வீட்டிலிருந்த வேளையில் பழைய பத்திரிகைகளை புரட்டியபோது கிடைத்தது. 



இலக்கியப்படைப்பாளி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற வகையில் உங்களது கல்வி, கலை, இலக்கியப் பணி பற்றிச் சற்று கூறுங்கள். 

நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறையில் முதுநிலை விரிவுரையாளராகக் பணியாற்றுகின்றேன். எனது புலமைத்துறை சமூகவியல். சமூகவியலில் கலைமாணி, முதுகலைமாணி, முதுதத்துவமாணி பட்டங்களைப் பெற்றுள்ளேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரும் முன் ஆரம்பக்கல்வி முதல் தேவரையாளி இந்துக் கல்லூரியில் கற்றுவந்தேன். உயர்தரத்தை கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியில் தொடர்ந்தேன். எனது இலக்கிய ஆர்வத்துக்கு களங்கள் பல தந்த இந்தக் கல்லூரிக் காலங்கள் மறக்கவியலாதவை. நினைந்து இன்புறத்தக்கவை. அந்தக் கல்லூரிகளில் கற்பித்த ஆசிரியர்கள், அவர்கள் அமைத்துத் தந்த களங்கள் உள்ளுறைந்த ஆற்றல்களை புடம்போடக் காரணமாயின. பல்கலைக்கழகக் கல்விக் காலத்தில் கிடைத்த அனுபவங்களும் சிந்தனை விரிவாக்கமும் நம்மைப் புடம்போட்டன. சமூகம் பற்றிய புரிதலுக்கான சில கோட்பாட்டுக் கண்ணோட்டங்களை அறிமுகமாக்கியது.

இலக்கியத்துறையில் என்னை சிறுகதைப் படைப்பாளியாக அடையாளப்படுத்தவே விரும்புகின்றேன். இலக்கியத் திறனாய்வில் ஓரளவு நாட்டம் உள்ளது. சமூகவியல் சார்ந்த எனது எழுத்துக்களுக்கப்பால் சமூகவியல் கண்ணோட்டத்துடன் இலக்கியங்களை படைப்பதும், திறனாய்வு செய்வதும் இலக்கியத்தின் மூலம் சமூகத்தைக் கண்டுகொள்ள வாய்ப்பளிக்கின்றது. 'இலக்கியத்தில் சமூகம்: பார்வைகளும் பதிவுகளும்" எனும் எனது நூல் சமூகவியல் வழிப்பட்ட இலக்கிய நோக்கினை வெளிப்படுத்துவது.   திறனாய்வுக்கான சிறந்த நூலுக்கான வடக்கு மாகாண விருது(2015) பெற்றது. எனது 'கிராமியம்-கல்வி-மேம்பாடு: சமூகவியல் பார்வைகள்" எனும் நூல் தேர்ந்த சமூகவியல் கட்டுரைகளை உள்ளடக்கியது. 'முதுசொமாக..", 'தொலையும் பொக்கி~ங்கள்", 'இரகசியமாய்க் கொல்லும் இருள்" எனும் மூன்று சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்தவை. 'இரகசியமாய் கொல்லும் இருள்" சிறந்த சிறுகதை நூலுக்கான வடக்குமாகாண விருதினைப்(2016) பெற்றது. எனது சிறுகதைகளில் நன்கு பேசப்பட்ட 'பாடகனின் மரணம்", 'லீவு போம்", 'துகிலுரிப்பு", 'சுமப்பவர்கள்" முதலானவை சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த மொழியாக்கத்தில் திசமாரகம எஸ்.ஜீ.எஸ். சரத் ஆனந்தவின் பங்கு முதன்மையானது. 

இலக்கியத்துறையில் எத்தகைய காலத்தில் காலடிச்சுவடுகளைப் பதித்தீர்கள்? உங்களுக்கு வழிகாட்டிகளாக யாராவது இருந்தார்களா?

1990 களில்தான் எனது இலக்கியப் பிரவேசம். எல்லோரும் குறிப்பிடுவது போல மாணவப் பருவத்தில் விபத்தாக நிகழ்ந்த இலக்கியப் பிரவேசம் போலன்றி இது சற்று நிதானமான தெளிவுடன்தான் நிகழ்ந்ததாக எனக்குள் ஒரு நினைப்பு. கடினமான பயிற்சி, மூத்த எழுத்தாளர்களின் வழிகாட்டலும் ஆலோசனைகளும், தேர்ந்த வாசிப்பு என்பன பற்றிய தீர்க்கமான புரிதலும், பிரக்ஞையும் ஏற்படும் நிலையில்தான் எனது முதலாவது சிறுகதையை எழுதினேன். 1993இல் பெரும் எடுப்பில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுகதைப் பட்டறை ஒன்றில் கலந்து கொண்டு புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்கள் பலரிடம் பயிற்சி பெறவும் அவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தவும் வாய்ப்புக் கிடைத்தது. வரதர், சொக்கன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், சாந்தன், யேசுராசா, முதலிய படைப்பாளிகள் பலரிடம் ஓரிடத்தில் பயிற்சிபெற முடிந்தது. அந்தப் பட்டறையில் முதன்முதலில் 'வசிப்பினங்கள்" எனும் ஒரு சிறுகதையை எழுதினேன். மூத்த படைப்பாளி அ.யேசுராசா முன்னிலையில் அந்தக் கதையை வாசித்து விமர்சனம் செய்தமை இன்றும் மனதில் நிறைந்துள்ளது. 

        அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருந்த 'உதயன்-சஞ்சீவி" பத்திரிகை எம்மைப்போன்ற இளம் படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்திருந்தது. போர்க்காலத்துச் சூழுலில் எங்கள் படைப்புக்களை வெளியிட அந்தப் பத்திரிகையின் அப்போதைய நிர்வாகத்தினர் பெரும்பங்காற்றினர். இன்று எழுதிவரும் இராகவன், இயல்வாணன், உடுவில் அரவிந்தன், தாட்சாயினி முதலிய பல படைப்பாளிகளுக்கு களம் தந்தது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டிருந்த காலத்தில் பல்கலைக்கழகப் பதிவாளராக செங்கை ஆழியான் பணிபுரிந்தார். அப்போது பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்துகொண்டு சிறுகதை எழுதிவந்த பலரை ஒன்றிணைத்து அவர்களின் படைப்புகளை தொகுத்து மல்லிகைப் பந்தல் வெளியீடாக 'மண்ணின் மலர்கள்" எனும் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டு எம்போன்றவர்களுக்கு அடையாளம் தந்தார். அந்தத் தொகுப்பில் எனது 'பித்து மனங்கள்" எனும் சிறுகதை இடம்பெற்றது. பின்னர் எனது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'முதுசொமாக" எனும் நூலுக்கு செங்கை ஆழியான் ஒரு அணிந்துரை தந்திருந்தார். தெணியான், குப்பிழான் ஐ. சண்முகன், பேராசிரியர் என். சண்முகலிங்கன் ஆகியோரின் குறிப்புக்கள் மற்றும் முன்னுரைகளுடன் எனது முதல் நூல் வெளியானபோது வெளியீட்டு விழாவில் செங்கை ஆழியான், தெணியான், கலாமணி, பேராசிரியர் என். சண்முகலிங்கன், ஆ.கந்தையா முதலிய மூத்த எழுத்தாளர்கள் என்னுடன் இருந்து தட்டிக்கொடுத்தார்கள். அந்த நினைவுகள் மனத்தின் ஆழம்வரை நிறைந்திருப்பவை. 

இலக்கியப் படைப்பாளி ஒருவரே சமூகவியலாளனாக விளங்குகின்றபோது படைப்பாக்கத்தில் அதன் பிரதிபலிப்பு எவ்வாறிருக்கும்? உங்களது படைப்பாக்க அனுபவத்தின் வழி இது பற்றிக் குறிப்பிட முடியுமா?

படைப்பு எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் அதன் கலையழகும் சமூக நோக்கும் பிரதானமானதாகும். இவை இரண்டில் எந்த ஒன்று சிறந்தது என்று வாதிடுவதில் அர்த்தமில்லை. கலையழகு அனுபவிப்பதற்கு. சமூகநோக்கு வாழ்வுக்கு. வாழ்வுக்குப் பயனளிக்காத எந்தவொன்றும் படைக்கப்படுவதால் எந்தப் பயனுமில்லை. படைப்புக்கள் சமூகத்தில் வாழும் மனிதர்கள், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகள், பலங்கள்-பலவீனங்கள் என்பவற்றையெல்லாம் பிரதிபலித்து நிற்கும். வரன்முறையாக சமூகவியலை கற்றுவரும் எனக்கு சமூகத்தின் போக்குகளை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக் கொள்ள அந்தத்துறை துணைசெய்கிறது. ஆயினும் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுவதும் புனைவாக்கம் செய்வதும் முற்றிலும் வேறுபட்டது. புனைவாக்கத்தில் கலைஅழகு முதன்மையானது. எனது சிறுகதைகள் சமூகத்தில் சில முதன்மையான சமூகப்பிரச்சினைகளை புனைவாக்குகின்றன. முதுமையின் துயர், சிறுபிள்ளைகளின் மீதான மேலாண்மை மற்றும் சிறுவர்களுக்கான சமூகநீதி, போரின் தாக்கங்கள், கிராமிய வாழ்வின் சிறப்புக்கள் முதலியவற்றை சமூகவியல் பார்வையுடன் வெளிப்படுத்துபவையென்று திறனாய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவை. அத்துடன் இலக்கியத்தை சமூகவியல் பின்னணியில் திறனாய்வு செய்வதற்கு எனது கல்வித்துறை சார்ந்த அறிவும் அணுகுமுறைகளும் துணையாகின்றன. இலக்கியத்தின் சமூகவியல் (Sociology of Literature) என்பது நம்நாட்டில் தனித்துவமாக வளர்த்தெடுக்கப்படவேண்டிய துறை.

முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற யுத்த காலத்தில் யாழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறீர்கள் அந்த அனுபவத்தைச் சற்றுக்கூறுங்கள்.

போர்க் காலம் அழிவுகளாலும் சந்தேகங்களாலும் இன்னல்களாலும் நிரப்பப்பட்டேயிருக்கும். இது எந்த சமூகத்திலும் ஒரே தன்மையுடையதே. இராணுவ நடவடிக்கைகள், இடப்பெயர்வுகள், உயிர் மற்றும் உடமை இழப்புக்களையும் அவற்றின் அவலங்களையும் நேரிலே அனுபவித்தவன். அதன் தாக்கங்கள் நிரந்தர வடுக்களாகிவிட்ட மனிதர்களை நாளாந்தம் தரிசித்தே வருகின்றோம். வாழ்வு இரும்படித்துக்கொண்டிருக்கையில் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்க முடியாது என்று யாரோ சொன்ன வாசகம் போருக்குள் வாழ்ந்த படைப்பாளிகளுக்கு மிகப்பொருத்தமாயமைந்தது. போர்க்காலத்தின் கொடுந்துயர்களைப் படைப்பாக்கம் செய்துவந்த பல படைப்பாளிகளில் நானும் ஒருவன். போர்க்கால இலக்கியங்கள் என்று ஒன்று இல்லை என்று மறுதலிக்கும் ஒரு சாரார் இருக்கிறார்கள். இது அபத்தமானது. அவர்களின் எண்ணம் போர்க்கால இலக்கியமென்றால் அது பரணிபாடுவது, போரை வலிந்துகட்டி ஆதரிப்பது என்பதே. அப்படி எண்ணுவது தவறு. அவை நான்கு தசாப்த வாழ்வின் பதிவுகள் என்று பார்க்கவேண்டும். எனது சிறுகதைகளில் இன உறவுகளிலான விரிசலும் அதுபற்றிய ஏக்கங்களும், போர் பாதித்த சிறுவர்களின் வாழ்வுச் சிக்கல்கள், புலப்பெயர்வுகளின் தாக்கங்கள், வாழ்விட இழப்புக்களின் பாதிப்புக்கள் எனப் பல விடயங்கள் கருப்பொருளாகியுள்ளன. இனத்துவச் சிக்கல்களை மேலாண்மை செய்பவர்களின் விருப்பு வெறுப்புகள் சாதாரண மனிதர்களின் வாழ்வு பற்றி கரிசனை கொள்வதில்லை. சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக்கூட அவர்கள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தும் நிலையுள்ளது. இது போர்க்காலத்திலும், போர் ஓய்ந்துவிட்ட காலத்திலும் நடந்தேறிவருகின்றது. முன்னர் குண்டுவீச்சுக்கள், இடப்பெயர்வுகள், உயிர்-உடமை இழப்புக்களைக் கண்டவர்கள் இப்போது நிலைகுலைந்த குடும்பங்கள், தாய்த்தலைமைக் குடும்பங்கள், இடரில்சிக்கிய இளைய தலைமுறை, சமூகப் பாதுகாப்பற்ற வாழ்விடங்கள், கட்டுப்பாடற்ற வன்முறைகள் முதலியவற்றால் பாதிப்புறுகின்றார்கள். போரும் போரின் பின்னான வாழ்வும் சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை துயர்களின் தொடர்ச்சியே. இந்தத் துயரை வெளிக்கொணர வேண்டிய கடப்பாடு ஒரு படைப்பாளியிடத்திலுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்திவிட்டால் மாத்திரம் முரண்பாடுகள் தீர்ந்துவிடாது. உள்ளத்தின் கட்டமைப்பிலான மாற்றம் முக்கியமானது. இதனை ஒரு படைப்பாளியால் சரிவரச் செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை.     

இலங்கையில் அரச மொழிகளாக தமிழ் சிங்கள மொழிகள் இருக்கின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சி எந்த வகையில் இருக்கின்றது?

இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி தனித்துவமானது. நீண்ட வரலாறு கொண்டது. அரச கரும மொழியென்று வருகின்றபோதுதான் அது பிரச்சினையாகின்றது. இனத்துவ முரண்பாட்டின் அரசியலோடு சேர்கின்றது. தமிழிலக்கிய வளர்ச்சிக்கான அரச ஆதரவு என்று பார்ப்போமானால் அது அதிகம் வழங்கப்பட வேண்டிய தக்க தருணத்தில்கூட குறைவாகவே வழங்கப்படுகின்றது என்றுதான் சொல்லலாம். வெறுமனே ஒரு பண்பாட்டுப் பெருவிழாவும் சாஹித்திய விழாவும், விருதுகளும் மட்டும் இலக்கிய வளர்ச்சியாகிவிடாது. படைப்பாளிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். படைப்பாளிகளை அமைப்பாண்மைகளாக(organized) ஆக்கவேண்டும். படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களை இடரின்றி வெளியிட தகுந்த ஏற்பாடுகளை உருவாக்கவேண்டும். மாகாண மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் ஆண்டுதோறும் வெறுமனே ஒரு இலக்கிய விழாவுக்காக கூடுவதை விடுத்து வரன்முறையான எழுத்தாளர் படைப்பாளிகளின் சந்திப்புக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய அரசஅமைப்புக்கள் முன்வரவேண்டும். ஆகக்குறைந்தது ஒவ்வொரு மாகாண மட்டத்திலேனும் அரச பிரசுராலயங்கள் அமைக்கப்பட்டு மலிவாகவோ அல்லது வட்டியற்ற கடனடிப்படையிலோ படைப்பாக்கங்களை வெளியிட அனுசரணை வழங்கப்படவேண்டும். பிரதேச செயலக மட்டங்களில் அவர்களின் இயலுமைக்கு ஏற்ப எழுத்தாளர்களுக்கான ஊக்குவிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இவை பன்முகத் தன்மையுடன் மேலும் வளர்க்கப்படவேண்டும். இதனை ஒப்பீட்டு ரீதியில் தமிழ்படைப்பாளிகளைக் கருத்திலெடுத்துச் செய்யவேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதை அரசு கருத்திலெடுக்க வேண்டும். இது மொழி மற்றும் இனம்சார்ந்த பிணக்குள்ள நாட்டில் நம்பிக்கையை மீட்டெடுத்தல் பற்றிய விடயமாகப் பார்க்கப்பட வேண்டும்.

தமிழர்களிடையே தமிழக சினிமா ஆதிக்கம் உள்ளது. நமது ஊடகங்களில் கூட தமிழகத் தொலைக்காட்சி நாடகங்களே அதிக அளவில் ஒளிபரப்பாகின்றன. இதற்கு மாற்று நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்க முடியும்?

ஊடகங்களின் விஸ்வரூப வளர்ச்சியை நிறுத்திவைக்கும் ஆற்றல் நம்மைக் கடந்துவிட்டது. சில சந்தர்ப்பங்களில் அவை ஒரு வணிக மையமான செயற்பாடாகவும் விளங்குகின்றது. வேறொரு வகையில் பண்பாட்டு மேலாதிக்கத்தினை அமைதியாகத் திணிக்கும் வழிமுறையாகவும் அது தொழிற்படுகின்றது. இதனால் ஒரு மக்கள் தொகுதியின் மரபுகளும் அடையாளங்களும் திட்டமிடப்பட்டவகையில் சீர்குலைக்கப்படுகின்றன. மொழி, கலாசாரம், வழக்காறுகள், மரபுகள், சிந்தனை முறைகள், உளப்பாங்குகள் முதலியவற்றில் இன்னொரு சாராரின் மேலாண்மை ஏற்படுவதற்கு ஊடகங்களின் செயலாற்றுகை பெரிதும் வேண்டப்படுகின்றது. இது இன்றைய உலகப் போக்கு. அதேவேளை மாற்றூடகம்(alternative media) தொடர்பான சிந்தனைகளும் உள்ளன. தனக்கான அடையாளத்தினையும் தனித்துவத்தினையும் நிலைநாட்ட விரும்பும் சமூகம் தனக்கான மாற்றூடகத்தினை தானே கண்டறியவேண்டும். இலங்கையில் சிங்கள மக்களிடத்தில் அவர்களுக்கென தனித்துவமான கலையம்சமான சினிமா வளர்ந்துள்ளது. ஒப்பீட்டுரீதியில் இலங்கைத் தமிழரிடையே இது வளர்ச்சி குன்றியதே. 

இதற்குக் காரணம் அயலகத்தில் - குறிப்பாக தமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ்படங்கள் மொழியால் ஒன்றாயிருப்பதே. அங்கிருந்துவரும் சினிமா நமக்குக் பரிச்சயமான மொழியில் இருப்பதால் அதற்குமேல் பயணிப்பதில் எங்களிடத்தில் தேக்கநிலை ஏற்படுகின்றது. இது நமக்கான ஊடகம் பற்றிச் சிந்திப்பதை தடுக்கிறது அல்லது தாமதமாக்குகின்றது. இது இன்னொருவரின் மூளையால் நம்மைச் சிந்திக்கவைக்கும் ஆபத்தினைத்தரும். எம்முடைய மூளையால் எம்மைப்பற்றிச் சிந்திக்கும் சினிமா மற்றும் நாடக வடிவங்கள் எம்மிடையே வரவில்லையென்று முற்றாக மறுதலிக்க முடியாது. போர்க்காலத்தில் ஸ்கிறிப்ற் நெற் மூலம் வந்த குறும்படங்கள், ஞானரதன், ஞானதாஸ், கேசவதாஸ், மதிசுதா முதலிய சிலரின் முயற்சிகள் முதன்மையானவை. இவற்றுக்கான ஊக்குவிப்புக்களை அரசும் ஊடக நிறுவனங்களும் வழங்குவதன் மூலம் மாற்றூடக வெளி ஒன்றினைத் திறக்க முடியும். 

இனங்களின் ஒற்றுமைக்காகவும் ஐக்கியத்திற்காகவும் இலக்கியங்கள் மூலமாகவும் ஒரு புதிய இன ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் உருவாக்க முடியாதா? 

ஏன் முடியாது? முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் தழிழர்களின் ஆயுதம் தரித்த பேரம்பேசும் சக்தியாக மேலாண்மை பெற்றிருந்த காலத்தில்கூட, இடையிட்டு வந்த ஒரு சமாதான அல்லது போர்நிறுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழ், சிங்கள படைப்பாளிகளோடு தமிழகப் படைப்பாளிகளையும் இணைத்து மானுடத்தின் கூடல் என்ற பெயரில் ஒரு படைப்பாளிகளின் மாநாட்டினை நடத்தியிருந்தனர். சிங்களப் படைப்பாளிகளும் தமிழ் படைப்பாளிகளும் பரஸ்பரம் தங்கள் கருத்துக்களால் இரு இனத்தவர்களிடையேயும் மாற்றுக்கருத்துக்களை உருவாக்குவதன்வழி அரசியலைக் கடந்து பிரச்சினைகளின் நியாயப்பாடுகளைப் புரிந்துகொள்ளும் நிலை வரலாம் என்ற எதிர்பார்ப்பு அந்த மாநாட்டின் பின்னணியில் இருந்தது. அப்போதைய நிலையிலேயே இதன் சாத்தியப்பாடு சிந்திக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கு படைப்பாளிகளும் இலக்கிய கர்த்தாக்களும் அரசியலுக்கு அப்பால் தெளிவுடனும் இதயசுத்தியுடனும் செயலாற்றுதல் வேண்டும்.  

இரு இனங்கள் மத்தியில் முறுகல் நிலை இருந்து வருகிறது இவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுத்து இன உறவுகளை கட்டியெழுப்புவது?

முறுகல் கடந்து, முரண்பாடு வலுத்து, போர்கள் நிகழ்ந்தும் தீர்வுகள் எட்டப்படாத நிலையிலிருக்கும் பிரச்சினையின் அடிப்படைகள் புரிந்துகொள்ளப்படவில்லை. சந்தேகம், மேலாண்மை, இருட்டடிப்பு, தாழ்வுமனப்பாங்கு, உயர்வுமனப்பாங்கு, குறைமதிப்பீடு முதலியவற்றின் விளைவுதானே முறுகல்களும் முரண்பாடும். இவற்றின் விளைவுகள்தானே நாம் அறுவடை செய்தவை. இப்போது அறுவடைகளைப் பேசுவதே பிரதானமாகிவிட்டது. அடிப்படைகளை யாரும் பேசுவதில்லை. இது தீர்வைக்காண்பதில் இரட்டைச்சுமையாகி நிற்கின்றது. நல்லுறவைக் கட்டியெழுப்ப பெருந்தெருக்கள் போடுவதைவிட மனங்களுக்குப் பாலமிடுவதே முதற்கடமையெனக் கருதுகின்றேன். காயம் பட்ட காலுக்கு ஒத்தடம் கொடுத்து மருந்திடுவதற்கு முன்னர் செருப்பு வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் என்று நினைப்பது பொருத்தமற்ற அணுகுமுறை. 



Comments